வெல்வதற்கே பிறந்தவன்நீ என்றிட்டப் போதும்
விளக்கமுடன் இலக்குதனைக் கொண்டிடுதல் வேண்டும் !
நல்விதமாய் அதைநோக்கி ஓடத்தான் வாழ்வில்
நாம்கொண்ட இலக்குதனை அடைந்திடக் காண்போம் !
எல்லோர்க்கும் பொருந்துமிது இலக்கதுவும் தன்னால்
எதிரிலே வந்ததாய் சரித்திரம் இல்லை !
செல்லுமிடம் தனைநோக்கி பயணிக்க எண்ணார்
சித்தமதில் தெளிவற்றப் பேதையரென் றாவார் !
இலக்குதனை நோக்கிநாம் ஓடிடா திருக்க
எங்கேநாம் போவோம் , எதனைச்சா திப்போம் ?
நலன்கள்தனைப் பெருக்கிடும் நோக்கமதில் கூட
நாணயம் நேர்மைதனை நாம்காக்க வேண்டும் !
சிலரேனோ இதுதன்னை மறந்திட்டு வாழ்வில்
சித்தமதில் தெளிவின்றிக் கொள்ளைதனை இட்டு
பலர்தூற்றக் காண்பதும் ; பழிதன்னை ஏற்றல்
பவித்திரம் என்றிட்டு ஆகிடவும் தகுமோ ?
ஓட்டமதைக் கொண்டிடும் வலிமையுள்ளப் போதும் ,
ஓயாமல் இருக்கின்றத் திடங்கொண்டப் போதும் ,
நாட்டமதில் தெளிவினை நாம்கொள்ள வேண்டும்
நாமதனை நோக்கியே பயணிக்க வேண்டும் !
கோட்டைதனில் பிறந்திட்ட கோமகன் மற்றும்
குடிசைதனில் பிறந்திட்ட ஏழையென்றப் போதும்,
மாட்சியதும் தன்னாலே வாராதாம் என்றும்
மாண்புடையோர் என்றாக மனதிலிதைக் கொள்க !
இலக்கில்லா வாழ்வுவோர் துடுப்பில்லாப் படகே,
எத்திசையில் போகுமது எங்குநமை சேர்க்கும் ?
துலக்கமுற்ற மதிதன்னை , உழைப்புதனைக் கொண்டு
துயர்கள்தனை ஊட்டிடும் இடர்கள்தனை வென்று
நலமதனை , வளமதனை நாம்காண வேண்டும்
நாணயம், நேர்கொண்ட வழிசெல்ல வேண்டும் !
உலகமே அறிந்திட்ட உயர்வுதனைக் கண்டோர்
உறுதியுடன் இலக்கடைய ஓடியவர் தானாம் !
உயர்வுதனை நோக்கிசெல்ல திட்டங்களைத் தீட்டு !
உறுதியுடன் , திறமையுடன் கடமைதனை ஆற்று !
அயர்வுதனைக் காணாத மனமென்றப் போதில்
அனைத்திலும் வெற்றியே என்றாகும் எளிதில் !
துயர்கள்தனைக் கண்டென்றும் துவளாமை வேண்டும்
துடிப்பினை, துணிவுதனைத் துணைகொள்ள வேண்டும் !
வியர்வைதனைச் சிந்தார்க்கு வெற்றியென்றும் இல்லை ,
வீண்கனவு கண்டோர்க்கு விடிவென்றும் இல்லை !
வாழ்வினில் தடம்பதிக்கும் வைராக்யம் வேண்டும் ;
வளமதனைக் காணும்வழி நல்வழியென் றாக
தாழ்வுதனைக் காண்போமோ , தலைதாழ்வும் வருமோ ,
தரங்கெட்ட குடிமகனென பிறர்பழிக்கத் தகுமோ ?
ஆழ்ந்திதை சிந்தித்து நோக்கமொன்றைக் கொள்க,
அயராமல் உழக்கும்மன உறுதியைப் பெறுக !
ஏழ்தலத்தோர் புகழ்கின்ற நல்வாழ்வைக் காண
என் ஓட்டம் தொடர்ந்திடுமாம் , என் இலக்கும் அதுவே !
என் ஓட்டம் என்றென்றும் என் இலக்கு தனைனோக்கி;
நன்முறையில் அடைவேனென நம்புகிறேன் ! ---- தென்றல்போல்
எதுவொன்றும் வாழ்வினிலே எளிதாகக் கிட்டாதாம் ;
இதுதனைநீ மறவாமல் இரு !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.